

வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி 28 செ.மீ. அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அதிகபட்சமாக தங்கச்சி மடத்தில் 338.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம்- 125.60, மண்டபம் 271.20, ராமேஸ்வரம் 438.00, பாம்பன் 280.00, திருவாடனை 12.80, தொண்டி 7.80, ஆர்.எஸ்.மங்கலம் 14.90, பரமக்குடி 25.60, மொடக்குறிச்சி 49.00, கமுதி 49.00, கடலாடி 73.20.