அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளதை காணலாம்
அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளதை காணலாம்

உடுமலை வனப்பகுதியில் பலத்த மழை- அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

பலத்த மழை பெய்ய தொடங்கியதுமே பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.

வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது.

வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் குளிப்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. வரிசையில் நின்று குளிக்கும் அளவுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பலர் பஞ்சலிங்க அருவியில் குவிந்தனர்.

உடுமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், நேற்று மதியம் முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மாலை 5 மணியளவில் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் கனமழை கொட்டியது.

இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டியது.

அந்த தண்ணீர் அடிவாரப் பகுதியில் உள்ள பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று சப்தகன்னிமார் கோவிலை தழுவிவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

மேலும் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. பலத்த மழை பெய்ய தொடங்கியதுமே பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பக்தர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. பக்தர்கள் உடனடியாக வெளியேறியதால் வெள்ளத்தில் இருந்து தப்பினர். இல்லையென்றால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

மேலும் கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் உண்டியலை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டினர். தொட ர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வெள்ளம் குறைந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நேற்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பஞ்சலிங்க அருவி மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல இருந்தனர். காட்டாற்று வெள்ளம் காரணமாக தடைவிதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com