

தஞ்சாவூர்:
குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
தஞ்சையில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. காலை 8 மணி அளவில் சாரல் மழை பொழிந்தது. சிறிது நேரம் மழை நீடித்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதியில் நள்ளிரவு ஒருமணி முதல் லேசான சாரல் மழை இருந்தது. விடியற்காலை 4 மணி முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தற்போது நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் செங்கல் சூளை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கன மழையில் சம்பா சாகுபடி பாதிப்பு அடைந்துள்ளது. இன்று நடைபெற இருந்த அறுவடை பணிகள் முற்றிலுமாக முடங்கிப் போயின. வயல்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் செங்கல் சூளை மழைநீரால் பாதிப்பு அடைந்துள்ளது.
நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில், 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, நாகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் ஆங்காங்கே அறுவடை செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த திடீர் மழையால் அறுவடை பணி முடங்கிப்போய் உள்ளது. மேலும் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 69.6 மி.மீ., தலைஞாயிறில் 23.2 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததாலும் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சணல் திரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சம்பா அறுவடை பணிகள் நடந்து வந்தன. தற்போது பெய்து வரும் மழையால் வயலில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அறுவடை பணி செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் மூழ்கி வீணாகும் என்று வேதனை தெரிவித்தனர். இதேபோல் செங்கல் உற்பத்தி பாதிப்பால் கட்டுமான பணிகள் முடங்கியது.