சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

கருப்பூர்:

சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க கவர்னர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார்.

இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்தநிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கு பட்டச் சான்றிதழை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டச் சான்றிதழை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில் பட்டம் பெற்ற 397 மாணவர்களுடன் சேர்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46,365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் பதிவாளர் பெ.விஸ்வநாதமூர்த்தி, தேர்வாணையர் எஸ்.கதிரவன், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com