திருப்புல்லாணி அருகே அரசு பள்ளி மாணவி கண்டெடுத்த ஈழக்காசுகள்

ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமண்குண்டு, அழகன் குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன.
மாணவி கண்டெடுத்த ஈழ காசுகள் - மாணவி முனீஸ்வரி
மாணவி கண்டெடுத்த ஈழ காசுகள் - மாணவி முனீஸ்வரி
Published on

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப்படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களில் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் சீனப்பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர்.

இந்த நிலையில் இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த மாணவி முனீஸ்வரி, முதலாம் ராஜராஜ சோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளை கோரைக் குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து இந்த பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கூறியதாவது:-

வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மன்னர்கள் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டனர்.

போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்தன.

பொன், வெள்ளி, செம்புகளில் இந்த காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு என்று அழைக்கப்படுகிறது. கோரைக் குட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 காசுகளும் செம்பால் ஆன ஈழக்கருங்காசுகள் ஆகும்.

இந்த காசுகளின் ஒருபக்கத்தில் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ‘ என 3 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இந்த காசில் உள்ள மனிதர் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்து இருக்கிறார்.

ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமண்குண்டு, அழகன் குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன.

இலங்கையின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட இவை சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது.

ஏற்கனவே இந்த பள்ளி மாணவர்கள் பஞ்சந்தாங்கி, தாதனேந்தலில் சோழர்களின் ஈழக்காசுகள், பால்கரையில் டச்சுக்காரர்களின் காசுகள், திருப்புல்லாணியில் கச்சி வழங்கும் பெருமாள் எனும் பாண்டியர் காசு, ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளையும் கண்டெடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com