திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று முழு கடையடைப்பு போராட்டம்

இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.
திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று முழு கடையடைப்பு போராட்டம்
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நகர்புற எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிமுறைக்கு புறம்பாக 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே சுங்கச்சாவடியை வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது போராட்டம் நடத்தும்போது கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதுமாக சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் முதல் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது. இதை கண்டித்தும், கப்பலூர் சுங்கச்சாவடியை உடனே அகற்ற வேண்டும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லாததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) திருமங்கலம், கப்பலூர் சிட்கோ பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம், மோட்டார், வாகன ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம், கப்பலூர் சிட்கோவில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்.

இன்றைய தினம் திருமங்கலத்தில் உள்ள 2000-க்கு மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக் குழுவினர் கடைகள் தோறும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வியாபாரிகள், பொதுமக்கள் கூறுகையில், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் மட்டுமல்லாது வருகிற பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com