கன்னியாகுமரி அருகே மீனவர்கள் திடீர் போராட்டம்- போலீஸ் குவிப்பு

கன்னியாகுமரி அருகே 45 குடும்பங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் தங்களுக்கு வீட்டின் உரிமையை பெற்றத்தரவும், தங்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை காணலாம்
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை காணலாம்
Published on

கன்னியாகுமரி:

கடந்த 2004 -ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கோவளத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் வீடுகளை இழந்த மக்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுக்க முன் வந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சொந்த செலவில் தலா 2¾ சென்ட் நிலம் வாங்க முன்வந்தனர்.

இதற்காக 45 குடும்பத்தினர் தலா ரூ.50 ஆயிரத்து 500 வீதம் அப்போதைய பங்குத்தந்தையிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அவர் 45 பேரின் பெயரில் தலா 2¾ சென்ட் நிலத்தை பகிர்ந்து கொடுத்தாராம். இதையடுத்து, 45 வீடுகளைஅந்த தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்தது. அந்த வீடுகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பொதுமக்களிடம் பெற்ற தொகை நில உரிமையாளருக்கு வழங்கவில்லை என்றும், போலியான பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்படி நிலங்களை நில உரிமையாளரிடம் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், 45 குடும்பங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் தங்களுக்கு வீட்டின் உரிமையை பெற்றத்தரவும், தங்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு உள்ள தேவசகாயம் குருசடி முன்பு நேற்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாகவும் மீனவ மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com