

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நேற்று மானூர் யூனியன் அலுவலகம் முன்பு தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று பாளை படப்பக்குறிச்சி, பொட்டல், திருவண்நாதபுரம், பெரியபாளையம், திம்மராஜபுரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அப்பகுதி விவசாய சங்க தலைவர் காமராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு நெல்லுடன் வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக வீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியனும் வந்தார்.
அப்போது விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாசல் முன்பு தரையில் நெல்லை கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தரையில் கொட்டிய நெல்லை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த நெல்லை எடுத்த விவசாயிகள் அதனை அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் வீசினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் கடந்த ஆண்டு நேரடி கொள்முதல் நிலையம் இருந்ததால் எளிதாக நெல்லை கொடுக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. எனவே படப்பக்குறிச்சியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
போராட்டத்தில் விவசாயிகள் தங்கராஜ், பெருமாள், செந்தில், மாசிலாமணி, இன்பராஜ், அருண், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.