

சென்னை:
ஜெருசலேம் நகரில் இயேசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கழுதையின் மீது பவனியாக சென்றார். அப்போது அவருக்கு முன்பாகவும் பின்பாகவும் சென்ற திரளான மக்கள் ‘தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா’ ‘உன்னதத்திலே ஓசன்னா’ என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
சமாதானத்தின் அடையாளமாக இயேசு கழுதையின் மீது பவனியாக சென்றதாக வேதாகமம் குறிப்பிடுகிறது. அதனை நினைவுகூரும் வகையில் இன்று உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.
சென்னையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு குருத்தோலை பவனி உற்சாகமாக ஆலயங்களில் இன்று காலை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக குருத்தோலை பவனி, வழிபாடு போன்றவை கடந்த ஆண்டுகளில் நடைபெறவில்லை.
காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் நீங்கியதால் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு உற்சாகமாக நடந்தது.
சென்னையில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஊர்வலம் சிறப்பாக நடந்தது. கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டன. காலை 6 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் இருந்து ஊர்வலமாக குருத்தோலையுடன் சென்றனர். குருத்தோலைகளில் தென்னை, பனை சிலுவையின் அடையாளத்தை பல்வேறு வடிவங்களில் தயாரித்து அதனை கையில் பிடித்து சென்றனர்.
முன்னதாக அதனை பாதிரியார்கள் புனித நீர்மூலம் தொடர்ந்து சபை மக்களுக்கு வழங்கினார்கள். பாதிரியார் தலைமையின் கீழ் சீடர்கள் அணிவகுத்து செல்ல குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் பவனியாக நடந்து சென்றனர்.
அப்போது, ‘ஓசன்னா பாடுவோம்... இயேசுவின் தாசனை... என்ற பாடலை பாடி சென்றனர். ஊர்வலம் ஆலயத்திற்கு வந்ததும் சிறப்பு வழிபாடு நடந்தன. அதன்பின்னர் இறுதி ஆசி கூறி பாதிரியார், இறைமக்களை அனுப்பி வைத்தனர். ஆலயத்தில் கொடுக்கப்பட்ட குருத்தோலைகளை வீடுகளுக்கு கொண்டுசென்று பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அதன்படி குருத்தோலைகளை எடுத்துச்சென்றனர்.
சாந்தோமில் சென்னை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் குருத்தோலை ஞாயிறு சிறப்பாக நடந்தது. இதேபோல பாரிமுனை அந்தோனியார் ஆலயம், பெசன்ட்நகர், பெரம்பூர், லூர்துமாதா, எழும்பூர், பரங்கிமலை, அண்ணாநகர், மாதவரம் அந்தோனியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்தோலிக்க ஆலயங்களில் குருத்தோலை பவனி-சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பல ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர்களின் கீழ் உள்ள ஆலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் வழிபாடு உற்சாகமாக நடந்தது. பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கதீட்ரல் பேராலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். இதேபோல ராயப்பேட்டை, சூளை, வேப்பேரி, பாரிமுனை, அடையார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது. அதனைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.
இதேபோல சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்தே, ஏமத்தடிஸ்ட், லுத்தரன் திருச்சபைகளிலும் குருத்தோலை பவனி, வழிபாடு எழுச்சியுடன் நடந்தது.
கொடுங்கையூரில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் குருத்தோலை பவனி-ஆராதனை ஆயர்கள் ஏசுதாஸ், தானியேல் மெஹாக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தொடர்ந்து சபை மக்கள் முத்தமிழ் நகர், அம்பேத்கர் தெரு வழியாக பவனியாக சென்றனர்.