

சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றிலும் டால்பின், ஆமை, கடல்பசு, திமிங்கலம் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக டால்பின்கள் மன்னார் வளைகுடா பகுதியில் தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் அதிகமாகவே உள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். மீனவர்கள் கரை வலை மீன்பிடி வலைகள் போடப்பட்டிருந்த உள்ள கடல் பகுதியில் மீன்களை சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் ஏராளமான டால்பின்கள் கூட்டமாக குவிந்து இருந்தன.
டால்பின்கள் ஒவ்வொன்றும் மீன்களை வாயில் கவ்வியபடி கடலின் மேற்பரப்பு வரையிலும் வேகமாக நீந்தியபடி துள்ளிக் குதித்து விளையாடின. இதில் குட்டி டால்பின் ஒன்றும் கடலின் மேற்பரப்பு வரை வந்து துள்ளி குதித்து விளையாடியது. மீனவர்கள் கரை வலையை கரைக்கு முழுமையாக மீன்களுடன் இழுத்த பின்னர் அந்த டால்பின்கள் அனைத்தும் கூட்டமாக மீண்டும் ஆழ் கடலை நோக்கி வேகமாக நீந்திச் சென்றது.
வாலிநோக்கம் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளமான டால்பின்கள் கடலின் மேற்பரப்பில் நீந்தி துள்ளிக்குதித்து விளையாடியதை அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் மற்றும் அங்கு வந்த பொது மக்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்தனர்.