

தஞ்சாவூர்:
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாகவும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழுவதும் மழை பெய்தது. பின்னர் இரவில் மழை இன்றி காணப்பட்டது. தஞ்சையில் இன்று அதிகாலை 4 மணி முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாரலும், திடீரென மிதமான மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. தொடர் மழையால் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதேப்போல் பாபநாசம், வல்லம், பூதலூர், மதுக்கூர், திருவையாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே அறுவடையான நெல் மூட்டைகள் அந்தந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் 1500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து உள்ளன. எனவே ஈரபதத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சம்பா அறுவடை பணிகள் முடங்கியது. மழை ஓய்ந்தால் மட்டுமே தண்ணீர் வடியும் என்ற நிலை உள்ளது.
மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் நிலக்கடலை உள்ளிட்ட மற்ற பயிர்களும் மூழ்கி சேதமடைந்துள்ளன. நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கு அதிகமான நெல் மூட்டைகள் நனைந்தன. இதேப்போல் செங்கல் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இன்றி அவதிப்பட்டனர்.
மாவட்டத்தில் அதிகபட்சடாக மன்னார்குடியில் 6.8 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இடைவிடாமல் மழை பெய்தது. வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்படுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்படைந்துள்ளது. பலர் வீட்டுக்குள்ளே முடங்கினர். நெற்பயிர்களோடு நிலக்கடலை, எள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரில் மிதப்பதால் பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
ஒட்டுமொத்தத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சுமார் 6 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் சாய்ந்தன. மழை ஓய்ந்தால் மட்டுமே அறுவடை செய்யும் நிலை உள்ளது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு இதுவரை வழங்கவில்லை. தற்போது பாதிப்படைந்த பயிர்களையும் கணக்கீடு செய்து அதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.