

திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டியில் கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
இந்த விழாவில் கோவிலில் வளர்க்கப்படும் ஆடுகள் பலியிடப்பட்டு திருவிழாவின்போது உணவு தயாரிக்கப்படும். இங்கு வளரும் ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையாசாமி வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டன.
50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.
இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பரிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த இலைகள் காய்ந்து அந்த பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவர்.
இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந் தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.