ஆழியாறு அணையில் காணப்பட்ட முதலை- சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

அணைக்குள் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்கிலேயர் பாலம் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆழியாறு அணையில் காணப்பட்ட முதலை- சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை உள்ளது. தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணையில் உள்ள பாறைகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெளியே தெரிகின்றன.

நீர்மட்டம் குறைந்து விட்டதால் சித்தாறு, கவியருவி ஆகியவை சேரும் அணைப்பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர் மட்டம் குறைந்ததால் அணையில் உள்ள முதலைகள் கரைப்பகுதிக்கு வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்குவது, வனப்பகுதியில் உள்ள அணை பகுதிக்குள் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.

ஆங்கிலேயர் கால பாலம் மற்றும் அறிவுத்திருக்கோவிலுக்கு எதிரே அணைக்குள் சற்றுலாபயணிகள் இறங்குவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் தண்ணீர் குறைவாக இருப்பதால் சேற்றில் சிக்கியும் உயிரிழப்பு ஏற்படக்கூடும். சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அணைக்குள் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்கிலேயர் பாலம் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com