குமரியில் மழை நீடிப்பு- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்வு

கோடை மழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. திற்பரப்பு பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.
பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை
Published on

குமரி மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்ததையடுத்து பொதுமக்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். நீர்நிலைகளிலும் நீர்மட்டம் சரிய தொடங்கியது.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்ய தொடங்கியது. இது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கடந்த 10 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றும் மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக ரோடுகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இங்கு அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், மயிலாடி, கோழிப்போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 2 அடியும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 6 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.02 அடியாக இருந்தது. அணைக்கு 184 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 23.80 அடியாக உள்ளது. அணைக்கு 133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 8.46 அடியாகவும் சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 8.56 அடியாகவும் உள்ளது.

கோடை மழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. திற்பரப்பு பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். திற்பரப்பு அருவியில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து ஆனந்த குளியலிட்டு செல்கிறார்கள்.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை-1, பெருஞ்சாணி-15.6, சிற்றாறு-1-9.4, மாம்பழத்துறையாறு- 17.6, நாகர்கோவில்-40, பூதப்பாண்டி-34.6, சுருளோடு-8.2, கன்னிமார்- 5.4, பாலமோர்-16.4, மயிலாடி-10.2, நிலப்பாறை- 29.6, ஆணைக்கிடங்கு- 16.4, அடையாமடை-37, கோழிபோர்விளை-4, புத்தன் அணை-15, திற்பரப்பு-11.4

இதையும் படியுங்கள்...மளிகை வியாபாரியிடம் 264 பவுன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com