

கோவை:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள உருமாண்ட கவுண்டன் புதூரை சேர்ந்தவர் நடராஜ்(வயது56). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
நேற்று காலை நடராஜ் உடலில் பலத்த காயங்களுடன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது அவரது உடலின் அருகே காலி மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கிடந்தது. இதனால் குடிபோதையில் யாராவது அடித்து கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நடராஜ், பக்கத்து வீட்டை சேர்ந்த குருசாமி என்பவருடன் சேர்ந்து மதுகுடிக்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.
அப்போது வடுகபாளையம் பகுதியில் நின்றிருந்த குருசாமியை போலீசார் பிடித்தனர். அவரது கண்ணில் காயம் இருந்ததை கண்ட போலீசார் எப்படி இது ஏற்பட்டது என்று விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் நடராஜை தலையில் கல்லை போட்டு கொன்றதை ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் குருசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் இறந்த நடராஜின் வீடு அருகே வசித்து வருகிறேன். நானும், அவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம். பொங்கல் அன்று வெளியில் சென்று மது குடிக்க முடிவு செய்த நான், நண்பர் நடராஜையும் அழைத்தேன்.
பின்னர் நாங்கள் இருவரும் நண்பர்களுடன் பச்சாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றோம். அங்கு மது பாட்டில்கள் வாங்கி கொண்டு சென்னியப்ப கவுண்டன் பகுதியில் உள்ள காட்டுபகுதிக்கு சென்றோம்.
அங்கு அனைவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினோம். சிறிது நேரம் கழித்து எங்களுடன் வந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். நானும், நடராஜூம் மட்டும் இருந்து தொடர்ந்து மது அருந்தினோம்.
அப்போது நடராஜ், என்னிடம் உனது மனைவியின் நடத்தை சரி கிடையாது. அவளை என்னுடன் 2 நாட்கள் அனுப்பிவை. அவளுடன் 2 நாட்கள் இருந்து விட்டு பின்னர் உன்னிடம் அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்தார். இதை கேட்டதும் எனக்கு கடும் கோபம் வந்தது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி ஒருவரையொருவர் தாக்கி கொண்டோம். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த கல்லை எடுத்து நடராஜின் தலையில் போட்டேன். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதையடுத்து நான் எதுவும் நடக்காதது போல், மீண்டும் சென்று மதுகுடித்து விட்டு இந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.