குன்றி மலைப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது

குன்றி மலைப்பகுதியில் ஒரு மாதத்துக்குள் செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி முழுமையாக முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற உள்ளதால் மலைகிராம மக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் குன்றி மலைப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருவதை காணலாம்
சத்தியமங்கலம் குன்றி மலைப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருவதை காணலாம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஞ்சாயத்து யூனியனை சேர்ந்தது குன்றி மலை கிராமம். வனப்பகுதிகள் நிறைந்த இங்கு 15 குக்கிராமங்கள் உள்ளன. கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

இங்கு எந்த ஒரு தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லை. இந்த 15 குக்கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம், கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.

இங்கு 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், 120-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் அடர்ந்த வனப்பகுதியை கடந்தே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்தது. இங்குள்ள மாணவர்களுக்கு செல்போன் டவர் இல்லாததால் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குதியாளதூர் என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு செல்ல வேண்டும். அங்குள்ள ஒரு இடத்தில்தான் சிக்னல் கிடைக்கும்.

ஆனால் இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதைத்தாண்டி தான் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் படிப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என நீண்ட வருடமாக மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மலைப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதன் பயனாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பாக மலை கிராமப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அங்குள்ள மலை உச்சியில் உள்ள பட்டா நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் கான்கிரீட் கட்டும் பணி தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்துக்குள் செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி முழுமையாக முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற உள்ளதால் மலைகிராம மக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com