திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு

பிரதான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.தீ விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.
திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு
Published on

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் தேங்காய் பழக்கடை வைத்துள்ளார்.

இவர் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் டாஸ்மாக் அருகே சாலை யோரத்தில் அவரது காரை நேற்று இரவு நிறுத்தி விட்டு ஓட்டலில் டிபன் வாங்க சென்றுள்ளார். திடீரென இந்த காரின் முன்பக்கத்தில் இருந்து புகை கிளம்பியது. இதனையடுத்து கார் தீ பிடிக்க தொடங்கியது.

இதுகுறித்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். காரை எடுக்க வந்த கார் உரிமையாளர் கார் தீ பற்றி எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் பேட்டரியில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்ததாக தெரியவந்தது.

மேலும் காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.

பிரதான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தீ விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com