

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கம்பளி ஆடையின்றி வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சாலையோரங்களில் தீ மூட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குளிர்காய்ந்து வருகின்றனர். மனிதர்களை மட்டுமின்றி மலர்களையும், செடிகளையும் பனிப்பொழிவு தாக்கி வருகிறது.
கொடைக்கானலில் எதிர்வரும் மே மற்றும் ஏப்ரல் சீசனை வரவேற்கும் விதமாக பிரையண்ட் பூங்காவில் சால்வியா, டெல்பீனியம், பிங்க் ஆஸ்டர், லில்லியம், டெய்சி, அஸ்டமேரியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடும் பணி நடைபெற்றது. தற்போது கொடைக்கானலில் மழை குறைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக நீர்ப்பனிப் பொழிவு ஆரம்பித்துள்ளது.
பனிப்பொழிவிலிருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க பூங்கா நிர்வாகத்தினர் ஆயிரக்கணக்கான செடிகள் மேல் பசுமைப்போர்வை போர்த்தி பாதுகாக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் கோடை சீசனுக்கு சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக நடவு செய்யப்பட்டுள்ள வண்ண வண்ண மலர்ச்செடிகளை பாதுகாக்கும் விதமாக பூங்கா நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கையால் பனியின் தாக்கத்தால் மலர்ச்செடிகள் கருகுவதிலிருந்து முழுமையான பாதுகாப்பில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாலை வேளையில் பனியின் தாக்கம் தொடங்கும் போது பசுமை போர்வை போர்த்தியும் காலை வேளையில் பனி தாக்கம் குறைந்த பிறகு பசுமை போர்வையினை அகற்றியும் பிரையண்ட் பூங்கா நிர்வாகத்தினர் மலர்ச்செடிகளைக் காப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.