தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்- லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே லாரி தொழில் முடங்கி உள்ள நிலையில் இந்த விலை உயர்வால் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
லாரி ஸ்டிரைக்
லாரி ஸ்டிரைக்
Published on

சேலம்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14 நாளில் பெட்ரோல் ரூ.7.94, டீசல் ரூ.7.99-ம் விலை அதிகரித்துள்ளது.

மேலும் சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே லாரி தொழில் முடங்கி உள்ள நிலையில் இந்த விலை உயர்வால் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தென் மாநில லாரி உரிமை யாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறியதாவது:-

உக்ரைன்-ரஷியா போரை காரணம் காட்டி தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவதாக அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த 14 நாளில் டீசல் விலை ரூ.8 அதிகரித்துள்ளது.

இது தவிர சுங்க கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலாவதியான சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அரசு அதை கண்டுகொள்ள வில்லை. சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சென்னையில் நடந்த தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.

21 நாட்களில் இந்த விலை உயர்வை குறைக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா உள்பட 7 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். எனவே விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com