அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலில் திரண்ட மக்கள்- கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் பாதை மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதால் சாலைகள் சீரமைக்கும் பணி முடிவடைந்த பின்னரே அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அகஸ்தியர் அருவியில் இன்று காலை குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
அகஸ்தியர் அருவியில் இன்று காலை குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
Published on

நெல்லை:

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

இங்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள்.

மேலும் இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து குடும்பத்துடன் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள் அகில இந்திய புலிகள் கணக்கெடுக்கும் பணி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது.

இதன் காரணமாக வனத்துறை சார்பில் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மணிமுத்தாறு அருவி, திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

நேற்றுடன் புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததையொட்டி அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை முதலே கார் மற்றும் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அகஸ்தியர் அருவிக்கு சென்று மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அங்கு பயணிகளுக்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. மேலும் சிறிய வகை கார்களுக்கு ரூ.50 மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அருவியில் வசூலிக்கும் கட்டண தொகையை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டண வசூல் காரணமாக உள்ளூர்வாசிகள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் பாதை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் சாலைகள் சீரமைக்கும் பணி முடிவடைந்த பின்னரே அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com