கண்டக்டர் குடும்பத்தை கட்டிப்போட்டு கைவரிசை- 50 பவுன் நகை கொள்ளையில் 5 வாலிபர்கள் கைது

கொள்ளை நடந்த வீட்டில் கலைந்து கிடந்த பொருட்களை தடயவியல் துறையினர் சோதனை செய்தனர்.தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கண்டக்டர் குடும்பத்தை கட்டிப்போட்டு கைவரிசை- 50 பவுன் நகை கொள்ளையில் 5 வாலிபர்கள் கைது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையை அடுத்த வி.எம்.சத்திரம் ஜான்சி ராணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 44). இவர் தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி வனிதா மாநகர பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ராமசாமி அவரது மகள், மகன் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கும்பல் ராமசாமி வீட்டிற்குள் புகுந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் வீட்டில் கிடந்த துணிகளை கொண்டு ராமசாமி மற்றும் அவரது குழந்தைகளை கட்டிப்போட்டனர்.

பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன்கள், மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துள்ளனர். அந்த நேரத்தில் வனிதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அவர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் 5 பேரும் நகை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டனர். வீட்டிற்குள் வந்த வனிதா தனது கணவர் மற்றும் குழந்தைகள் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களது கட்டுகளை அவிழ்த்து விட்டார்.

உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்த ராமசாமி கொள்ளையர்களை தேடி உள்ளாா். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து தூத்துக்குடி சாலையில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் சரவணக்குமாா் ஆகியோா் தலைமையில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் கலைந்து கிடந்த பொருட்களை தடயவியல் துறையினர் சோதனை செய்தனர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள புதுபாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்கு போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிகிச்சை பெற்று வரும் 2 வாலிபர்களும் தூத்துக்குடி லயன்ஸ்டோன் பகுதியை சேர்ந்த முத்து, சிலுவை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். தொடர் விசாரணையில் விபத்தில் சிக்கிய சிலுவையும், முத்துவும் தங்களது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து பாளை வி.எம்.சத்திரத்தில் ராமசாமியின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் யாரிடமும் சிக்காமல் தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்தவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முத்து, சிலுவை ஆகியோரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது அவர்களுடன் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த கண்ணன், கிஷோர் டேனியல் மற்றும் கிங்ஸ்டன் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 சவரன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் காயமடைந்த முத்துவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த கொள்ளையில் நாகர்கோவிலை சேர்ந்த சம்சுதீன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com