பண்ருட்டியில் மெக்கானிக் வீட்டில் 45 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

பண்ருட்டியில் மெக்கானிக் வீட்டில் இருந்து 45 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பூங்குணம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). சிங்கப்பூரில் மெக்கானிக்காக உள்ளார். இவர் தற்போது புதிய வீடு கட்டுகிறார். இதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

புதிய வீடு கட்டுவதால் தற்போது வசிக்கும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள வீட்டு மாடியில் தூங்கினார். நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை சுரேஷ் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 45 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை போனதை கண்டு பதறிபோனார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் வீட்டுக்கு வந்து கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com