மதுரையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி: 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான தொழிலாளர்கள்
பலியான தொழிலாளர்கள்
Published on

மதுரை:

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் நீரேற்று நிலையத்தில் இருக்கும் பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் அந்த கழிவுநீர் தொட்டியில் இருக்கும் மின்மோட்டார் பழுதானது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பழுதான மின் மோட்டாரை பழுது பார்க்கும் பணியில் மாநகராட்சியில் ஒப்பந்தத்திற்கு எடுத்திருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

நேற்று இரவு மதுரை மாடக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் மின் மோட்டாரை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். அவரது சத்தம் கேட்டு கழிவுநீர் தொட்டிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாடக்குளம் சரவணன் (32), அலங்காநல்லூர் லட்சுமணன் (31) ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி காப்பாற்ற முயன்றனர்.

அப்போது வி‌ஷவாயு தாக்கியதில் அவர்களும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். தொழிலாளர்கள் 3 பேர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது பற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திடீர் நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி பால முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களுடன் 30 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தீயணைப்பு வீரர்கள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முதலில் சிவகுமார், லட்சுமணன் ஆகிய இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். சரவணனின் உடல் கிடைக்கவில்லை. சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் சரவணன் உடலும் மீட்கப்பட்டது. இதையடுத்து இறந்த தொழிலாளர்கள் 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கழிவுநீர் தொட்டியில் வி‌ஷவாயு தாக்கியதில் 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். தொழிலாளர்கள் 3 பேர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துவிட்ட தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார், மேயர் இந்திராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இருந்த போதிலும் வி‌ஷ வாயு தாக்கியதால் 3 தொழிலாளர்களையும் பிணமாகவே மீட்க முடிந்தது. இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அவர்களின் மீது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாளர்களை அஜாக்கிரதையாக பணியில் ஈடுபடுத்தியது என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com