அரசு ஊழியர்கள் 3 பேர் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று சாதனை

குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.
அரசு ஊழியர்கள் 3 பேர் குரூப்-1  தேர்வில் வெற்றி பெற்று சாதனை
Published on

திருப்பூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி ( வயது 26). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித்தேர்வுக்கான படிப்பையும் கைவிடாது படித்து இன்றைக்கு, தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-ம் இடம்பிடித்து கூட்டுறவுத்துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை காளியப்பசாமி, விவசாயி. தாய் உமா மகேஸ்வரி. தம்பி, தங்கை உள்ளனர்.

சுபாஷினி கூறும்போது, வேலைக்கு சென்று வந்த எஞ்சிய நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் தந்த ஊக்கமும், பயிற்சியும் எனக்கு பக்கபலமாக இருந்தன. இன்றைக்கு நான் வெற்றி பெற்றதை பார்த்து என் தங்கை இன்றைக்கு போட்டித்தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

தொடர்ந்து குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். இந்திரா பிரியதர்ஷினி கூறும்போது, "வேளாண்மை அலுவலராக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் பணியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவே தாமதமாகும். ஆனால் தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளேன் என்றார். இவரது தந்தை கேசவன், தொழில் செய்து வருகிறார். தாய் ரேகாதேவி செஞ்சேரிப்புத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-ல் வெற்றிபெற்று இளநிலை உதவியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர் நித்யா (26). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். அரசு வேலை கிடைத்துவிட்டது என தேங்கிவிடாமல், தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவலராக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி-பழனியம்மாளின் மகள் ஆவார்.

3 பேரும் கூறும்போது, தமிழ்நாட்டில் குரூப் 1-ல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3 பேர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவது எங்களுக்கு ஆச்சர்யம். அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் நாங்கள் தேங்கவில்லை. எங்களின் அடுத்தடுத்த முயற்சிகளே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1- வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com