

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கருக்கு மேல் செய்யப்பட்டிருந்தது.
கதிர் முற்றிய நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் இந்த கனமழையால் வயலில் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகசூல் பாதிக்கும் என்று அச்சத்தில் ஆழ்ந்தனர். மேலும் மழை தொடர்ந்தால் வயலில் சாய்ந்த நெற்கதிர்கள் அழுகி சேதம் அடையும் என்று வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று காலை வரை மழை முழுவதுமாக நின்று விட்டது. இதனால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியதால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்றி முன்னதாகவே அறுவடை செய்து காய வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தாழ்வான பகுதிகளிலும், வடிகால் வசதி பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலும் இன்று காலை வரை தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதில் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்களில் 1000 ஏக்கரில் இன்னும் தண்ணீர் வடியவில்லை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட தாலுகா பகுதி ஆற்று கரையோரங்களில் உள்ள தாழ்வான விளைநிலங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கி கிடக்கிறது.
இன்னும் 2 நாட்களுக்குள் வயல்களில் தண்ணீர் முற்றிலும் வடிந்தால் தான் 30 சதவீதமாவது சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் தண்ணீர் வடியாததால் சம்பா பயிர்கள் அழுகி நெல்மணிகள் முளை விடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் விவசாயிகள் தாழ்வான பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி வயல்களில் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.