ஊட்டியில் 135வது குதிரை பந்தயம் நாளை தொடங்குகிறது- 600 குதிரைகள் பங்கேற்பு

குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 குதிரைகள் ஊட்டிக்கு வந்துள்ளன. ஒரு பெண் பயிற்சியாளர் உள்பட 30 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
குதிரை பந்தயம்
குதிரை பந்தயம்
Published on

ஊட்டி:

சர்வதேச சுற்றுலா மையமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் குதிரை பந்தயத்தோடுதான் தொடங்குவது வழக்கம். அதன்படி மெட்ராஸ் கிளப் சார்பில் இந்த ஆண்டுக்கான 135-வது குதிரை பந்தயம் தமிழ்புத்தாண்டான நாளை(வியாழக்கிழமை) தொடங்கி வருகிற ஜூன் மாதம் வரை 2 மாதங்கள் ஊட்டி ரேஸ்கோர்சில் நடக்கிறது.

இதற்காக பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக குதிரை பந்தயத்தில் சில போட் டிகளும் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை குதிரை பந்தய சங்கத்தின் செயலாளர் நிர்மல் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

மெட்ராஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் ஊட்டியில் இருமாதம் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குதிரை பந்தயம் தமிழ்புத்தாண்டான நாளை தொடங்கி ஜூன் மாதம் 18-ந் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 குதிரைகள் ஊட்டிக்கு வந்துள்ளன. ஒரு பெண் பயிற்சியாளர் உள்பட 30 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

அதேபோல, சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 ஜாக்கிகள் கலந்து கொள்கின்றன. அனைத்துப் பந்தயங்களும் காலை நேரத்தில் மட்டுமே நடைபெறும்.

நடப்பு ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி ஏப்ரல் 14, 15, 23, 24, 30 மற்றும் மே 1, 7, 8, 14, 15, 19, 20, 26, 27, ஜூன் 2, 3, 9, 10 ஆகிய நாள்கள் பந்தயங்கள் நடைபெறும். முக்கிய பந்தயங்களாக ஏப்ரல் 30-ந் தேதி பெண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 1,000 கினியாஸ் பந்தயமும், மே 1-ந் தேதி ஆண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 2,000 கினியாஸ் பந்தயமும் நடைபெறும்.

மே 10-ந் தேதி டெர்பி ஸ்டேக்ஸ் பந்தயங்களும், மே 14-ந் தேதி டாக்டர்.எம்.ஏ.எம். ராமசாமி நினைவு கோப்பைக்கான சிறப்பு பந்தயமும் நடைபெற உள்ளது.

ஊட்டியில் நடக்கும் முக்கிய போட்டியான நீலகிரி தங்க கோப்பை போட்டி ஜூன் 2-ந் தேதி நடக்கிறது. ஊட்டி ஜாவனய்ல்ஸ் ஸ்பிரின்ட் கோப்பைக்கான போட்டி ஜூன் 6-ந் தேதி நடக்கிறது. ஜூன் 18-ந் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மொத்தம் ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர மொத்தம் 18 போட்டிகள் நடக்கிறது. இம்முறை நடக்கும் இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினமும் மும்பை, புனே, ஐதராபாத், மைசூர், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் நடக்கும் அனைத்து குதிரை பந்தயங்களின் நேரடி ஒளிபரப்பு ஊட்டி ரேஸ்கோர்சில் காண்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com