நெல்லையில் 100 மில்லி கழுதை பால் ரூ.800-க்கு விற்பனை

குழந்தைகளுக்கு நோய், நொடிகள் தொற்றாமல் இருக்கவும், சீர்தட்டாமல் இருக்கவும் கழுதை பால் சிறந்ததாக கருதப்படுகிறது.
கழுதை
கழுதை
Published on

நெல்லை:

கழுதை பாலில் மருத்துவ குணம் இருப்பதாக வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் நெல்லைக்கு கழுதைகளை அழைத்து வந்து பால் விற்பது அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது திருச்சியில் இருந்து ஒரு தம்பதியினர் நெல்லைக்கு கழுதைகளை அழைத்து வந்து கழுதை பால் விற்று வருகிறார்கள். தற்போதைய கொரோனா, ஒமைக்ரான் பரவும் கால கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என பலரும் தங்கள் குழந்தைகளுக்கு கழுதை பாலை வாங்கி கொடுத்து வருகின்றனர்.

மேலும் மஞ்சள் காமாலை, பித்தம், குழந்தைகளுக்கு சீர்தட்டாமல் இருக்கவும் இதனை வழங்கி வருகிறார்கள்.

நேற்று மணிமூர்த்தீஸ்வரம் பகுதிக்கு சென்று கழுதைபால் விற்றவர்கள் இன்று 2-வது நாளாக நெல்லை, பாளை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் தெரு தெருவாக சென்றனர்.

ஒரு சங்கு கழுதை பால் ரூ.50-க்கு விற்கப்பட்டது. 100 மில்லி கழுதை பால் ரூ.800-க்கும் விற்பனையானது. கழுதை முகத்தை முகர்ந்து பார்த்தால் நோய்கள், காத்து கருப்புகள் அண்டாது என்று கிராமத்து பகுதியில் நம்பிக்கையாக உள்ளது. இதற்காக இன்று கழுதையின் முகத்திற்கு முன்னர் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை காட்டிசென்றனர்.

இதற்காக ஒரு குழந்தைக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த தம்பதியினர் கூறும்போது, நாங்கள் திருச்சியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறோம். கடந்த சில நாட்களாக விருதுநகரில் முகாமிட்டிருந்த நாங்கள் தற்போது நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளோம்.

தொடர்ந்து 10 நாட்கள் நெல்லையில் தங்கியிருந்து கழுதை பால் விற்பனை செய்ய உள்ளோம்.

குழந்தைகளுக்கு நோய், நொடிகள் தொற்றாமல் இருக்கவும், சீர்தட்டாமல் இருக்கவும், கழுதை பால் சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் பலரும் விருப்பத்துடன் கழுதை பாலை வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com