தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குவதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
Published on

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மொத்தம் 55 ஆயிரம் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையாக மே மாதம் முழுவதும் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றதால் அரசு பொது தேர்வுகள் மற்றும் அனைத்து பள்ளி மாணவர்களின் ஆண்டு இறுதி தேர்வுகள் முன் கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன.

ஏப்ரல் 17-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாட்கள் பள்ளி திறப்பை கல்வித்துறை தள்ளி வைத்தது.

இதன் மூலம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 49 நாட்கள் கிடைத்தது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டபடி தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளும் இன்று (4-ந்தேதி) திறக்கப்படுகின்றன.

கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்த மாணவர்கள் தற்போது பள்ளி திறக்கப்படுவதால் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

மழலை வகுப்புகள், 1-ம் வகுப்பு, பிளஸ்-1 ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள்.

பள்ளிக்கு புதிதாக வரும் மாணவர்களை வரவேற்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இன்றைய நாளிலேயே மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குவதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விலையில்லா பாட புத்தகங்களும், ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

இது தவிர 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 2 செட் இலவச சீருடை நாளை வழங்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் இவை அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தமிழக முழுவதும் சுமார் 4 கோடி பாட புத்தகங்களும் சுமார் 5 கோடி நோட்டுப் புத்தகங்களும் பாடநூல் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் முதல் நாளே இவற்றைப் பெறக்கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையை பொறுத்தவரையில் மாநகராட்சி சார்பில் 417 பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகிறது. 206 தொடக்கப் பள்ளிகளும் 130 நடுநிலைப் பள்ளிகளும் 46 உயர்நிலைப் பள்ளிகளும் 35 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com