

மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டை வலியுறுத்தி, தமிழக முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.
"தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உரிமையையும் காக்கும் இந்த விவகாரத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதே வலுவான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் அரசியல் அதிகாரப் பாதிப்பைத் தடுக்கவே இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்பட்டுத் தொடர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.