அறுபடை வீடுகளில் களைகட்டிய சூரசம்ஹாரம்.. திருத்தணியில் மட்டும் நடக்காது - ஏன் தெரியுமா?

கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் களைகட்டிய சூரசம்ஹாரம்.. திருத்தணியில் மட்டும் நடக்காது - ஏன் தெரியுமா?
Published on

முருப்பெருமானின் கோவில்களில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

6ம் நாளான இன்று அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம்:

திருப்பரங்குன்றத்தில் இன்று சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் அருகே சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிவப்பு நிற பட்டாடை அணிந்து மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்த சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.

இங்கு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வர, முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார்.

இங்கு, வீரபாகு, நவ வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படைசூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும், சக்திவேல் கொண்டு முருகன் வதம் செய்தார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

இங்கு, சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலைசுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. பின்னர், மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெற்றது.

ஆனால், முருகனின் 5ம் படை வீடான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறாது. அன்றைய தினம் திருத்தலம் அமைதியாக இருக்கும்.

அதற்கு காரணம், முருகன் கோபம் தணிந்து வள்ளியை திருமணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம். அதாவது, திரு தணிகை தான் திருத்தணி என்று கூறப்படுகிறது. அதனால், இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது.

முருகபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு கோயிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும், வதம் செய்தார். பின்பு நாவல் மரத்தடியில் நின்று பத்மாசூரனை சம்ஹாரம் செய்தார். சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

அறுபடை வீடுகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com