செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யவும் இடைக்கால தடை.
Senthil balaji- Supreme court
Published on

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 28ம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

மேல்முறையீடு

இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டது.

உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடைக்கால தடை

முன்ஜாமின் வழங்கிய தலைமை நீதிபதி மேலும் கூறியதாவது:-

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது.

புலன் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு தருவதை நாங்கள் உறுதி செய்கிறோம், தேவைப்பட்டால் எங்களை அணுகலாம்.

பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. வழிகாட்டுதல், அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமினை ரத்து செய்ய நேரிடும்.

இடைக்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

இவ்வாறு கூடிய எச்சரிக்கை மற்றும் நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com