கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு- விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு மணலில் தரை தட்டி நின்றது

பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
படகு தரை தட்டி நின்ற காட்சி.
படகு தரை தட்டி நின்ற காட்சி.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுகள் படகு துறையில் மணலில் தரை தட்டி நின்றது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com