

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளை (ஆக.10) தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் விஜய்.
அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவரை மாநிலத்தின் பாடல் முதலில் பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதனையொட்டி சமீபத்தில் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கூட்டாக இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளது. தீர்மானம் முன்மொழியப்பட்ட பின் அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் குறித்து பேசுவர்.
பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 2021ம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.