

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக தாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த முயற்சியை முறியடிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர் பான தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் முன் மொழிந்து பேசியதாவது:-
அரசியலே மக்களுக்கானதுதான். அதே மாதிரி அரசியல் கட்சின்னாலே அது மக்களுக்காகத்தான். அது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். கொள்கையில், நிலைப்பாட்டில் வேண்டுமென்றால் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களுக்கான பிரச்சனை என்றால் எல்லா அரசியல் கட்சிகளுமே மக்கள் பக்கம்தான் நிற்கும். நாங்களும் அப்படித்தான்.
மனசாட்சி உள்ள மக்களாட்சியாக இருப்பதே எங்கள் ஒரே விருப்பம். நமது விவசாயிகளுக்காகவும், நமது மக்களுக்காகவும் நின்றே ஆக வேண்டியது நமது கடமை, நம் உரிமை.
எல்லாவற்றையும் தாண்டி அதுதான் நமது உயிரான உணர்வு. நீராதாரம் தான் நமது மிக முக்கியமான அடிப்படையான வாழ்வாதாரத்தில் ஒன்று. நதிநீர் உரிமையும் நம்முடைய மிக முக்கிய உரிமைகளில் ஒன்று. அதை பாதுகாத்தே ஆக வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
அந்த உணர்வோட அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நமது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலுக்காகவும் கொண்டு வர இருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு யாரும், யாரையும் குறை சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாறு அனைத்து சட்டமன்ற கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
நம்முடைய சொந்தங்களான விவசாயிகளுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் கொண்டு வரப்படும் இத்தீர்மானத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். ஒருமித்த கருத்தோடு இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றி தரவேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.
பின்னர் அந்த தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சனை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சனையாகும்.
ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் ராஜேஷ் குமார் (காங்கிரஸ்), வன்னி அரசு (விடுதலை சிறுத்தைகள் கட்சி), எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி, (அ.தி.மு.க.), சவுமியா அன்புமணி (பா.ம.க.), பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.), ஆர்.செல்ல சுவாமி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), தி.மு.ராஜேந்திரன் (ம.தி.முக.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி), கே. நித்தியானந்தன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் பேசினார்கள்.
அதன் பிறகு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அவர் தனது உரையில், “அரசின் தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது அரசின் தனித்தீர்மானத்தில் ஒரு கருத்தை சேர்க்க கோரி உள்ளார்.
அதுகுறித்து கீழ்க்கண்ட கருத்தினை பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
மேகதாது பிரச்சனை சம்பந்தமாக எனது தலைமையில் 26.5.2026 அன்று மேகதாது பிரச்சனைக்காக பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே எதிர்க்கட்சி தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தினை 4-வது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என பேரவை தவைரை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அதன் பிறகு திருத்தப்பட்ட இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.