

தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையை இன்று இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி, இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடைகளை அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மாவட்டங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
ஈரோடு மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேப்போல் 32 ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் -மங்கலத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மங்கலம் ஊராட்சி -ரம்யா கார்டன் பகுதியில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெருந்திரளாக இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் மங்கலம்பெரிய பள்ளிவாசல் மற்றும் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரோஸ்கார்டன், வேட்டுவபாளையம் பள்ளிவாசல், அக்ரஹாரப்புத்தூர், ஆர்.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சொந்த ஊரில் நடைபெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி பல இடங்களில் குர்பானி இறைச்சி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிறப்பு தொழுகை நடக்கும் இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.