இட நெருக்கடி - தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனை

ராணுவத்துக்கு சொந்தமான இந்த இடத்திற்கு தமிழக அரசு வாடகை செலுத்தி வருகிறது.
Tamil Nadu secretariat
Published on

தமிழக அரசின் தலைமைச் செயலகம் மெரினா கடற்கரை சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது.

ராணுவத்துக்கு சொந்தமான இந்த இடத்திற்கு தமிழக அரசு வாடகை செலுத்தி வருகிறது.

இட நெருக்கடி

இங்குள்ள கோட்டை வளாகத்தில் பாரம்பரிய மிக்க கட்டிடத்தில் தலைமைச் செயலகம் செல்படுவதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளும் அங்குதான் உள்ளது. இதனால் கடும் இட நெருக்கடியை சந்தித்து வருகிறது.

முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் வந்து செல்லும் அவரது அலுவலக அறை பகுதிகள் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் அறைகள் சட்டசபை வளாகத்துக்கு மேலே முதல் மாடியில் இருப்பதால் அங்கும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.

சட்டசபைக்கு வந்து செல்லும் எம்.எல்.ஏ.க்கள் அமரும் அறைகளும் சிறிய அறைகளாகவே உள்ளன.

இதனால் இப்போது தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம், அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்பட இருக்கிறது.

ஜோதிடர் ஆலோசனை

இட நெருக்கடி மற்றும் வாஸ்துபடி சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதால் ஜோதிடர் ஆலோசனைக்கிணங்க 10-வது மாடிக்கு செல்ல முதலமைச்சர் விஜய் சம்மதித்ததாக கூறப்படுகிறது. அதன்படி 10-வது மாடியில் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்திலும் போதிய இட வசதி கிடையாது. அங்கும் இடநெருக்கடி தொடர்கிறது. இதுபற்றிய விவரமும் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கிண்டி கவர்னர் மாளிகை

இதற்காக கிண்டி கவர்னர் மாளிகை எதிரே உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்துக்குள் தலைமை செயலகத்தை கொண்டு செல்லலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

இந்த இடம் சரியில்லை என்றால் பட்டினப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் இந்த இடங்கள் தலைமைச் செயலகத்துக்கு சரிபட்டு வராது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் வேறு இடங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.

ஓமந்தூரார் வளாகம்

2006-ம் ஆண்டு முதலமைராக இருந்த கருணாநிதி கோட்டையில் இடநெருக்கடி இருப்பதை உணர்ந்து, புதிய தலைமைச் செயலகத்தை சட்டமன்றத்துடன் வசதியாக திட்டமிட்டு கட்டினார். 2010-ம் ஆண்டு இந்த புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது.

அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததும் அதை ஒரு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியதுடன் தலைமைச் செயலகத்தை மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார். அதன்பிறகு ராணி மேரி கல்லூரி அருகே தலைமைச் செயலகத்தை கொண்டு வரலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அந்த எண்ணமும் கைவிடப்பட்டது.

த.வெ.க. ஆட்சி

இப்படி ஒவ்வொரு ஆட்சியிலும் தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வந்தது. அதேபோல் இப்போது த.வெ.க. ஆட்சி வந்ததும் முதலமைச்சர் விஜய்யிடம், தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com