

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 16 சதவீத பற்றாக்குறையுடன் பதிவாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் கடுமையாக பின்தங்கியிருந்த தென்மேற்கு பருவமழை, இந்த மாதத்தில் தீவிரமடைந்ததால் நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 26-ந் தேதி நாடு முழுவதும் 3.372 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதே காலகட்டத்துக்கான இயல்பான மழையளவு 3.992 செ.மீ. ஆகும். இதனால், நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மழைப் பற்றாக்குறை 40 சதவீதம் வரை இருந்த நிலையில், இந்த மாதத்தில் பருவமழை தீவிரமடைந்த தால் ஒட்டுமொத்த நிலைமை மேம்பட்டுள்ளது. இந்த மாத மழை இயல்பை விட வெறும் 1 சதவீதம் மட்டுமே குறைவாக பதிவாகியுள்ளது.
இருப்பினும், ஆந்திரா, கேரளாவில் 37 சதவீதம், பீகாரில் 39 சதவீதம், ஜார்கண்ட் 34 சதவீதம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் மழைப் பற்றாக்குறை நீடிக்கிறது.
தமிழகத்திலும் 16 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் 25 சதவீதம், கோவாவில் 37 சதவீதம், அசாமில் 29 சதவீதம், அருணாசலப் பிரதேசத்தில் 39 சதவீதம், மேகாலயாவில் 56 சதவீதம் மழைப் பற்றாக்குறை உள்ளது. அதே நேரத்தில், லடாக்கில் 199 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது.
ஒடிசாவில் 18 சதவீதம், குஜராத்தில் 13 சதவீதம், சிக்கிமில் 6 சதவீதம், அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் வலுப்பெற்றிருந்தாலும், வரும் மாதத்திலும் (ஆகஸ்டு) மழையின் ஏற்றத் தாழ்வுகள் தொடர வாய்ப்புள்ளதால், விவசாயம் மற்றும் நீர்வள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.