சுரண்டை அருகே கல்லால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன்

சக்திவேல் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேலை கைது செய்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தி உள்ளனர்.
சுரண்டை அருகே கல்லால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன்
Published on

சாம்பவர்வடகரை:

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 74). இவரது மனைவி செண்டு. இவர்களது மகன் சக்திவேல்(45). இவருக்கு திருமணமாகி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சக்திவேலுக்கு அவ்வப்போது மனநிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து அவரது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செங்கோட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையே சக்திவேல் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். சமீபத்தில் தனது பெற்றோரை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் கருப்பசாமி தனது மனைவியுடன் அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் வளாகத்தில் சிறிய கூரை அமைத்து தங்கி வந்துள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கருப்பசாமி வசிக்கும் இடத்திற்கு சக்திவேல் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கருப்பசாமியிடம் வாக்குவாதம் செய்த சக்திவேல், தந்தை என்றும் பாராமல் அங்கு கிடந்த கல்லால் அவரை முகம் தெரியாத அளவிற்கு சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.

தகவல் அறிந்த சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேலை கைது செய்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சாம்பவர்வடகரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com