

"சீனாவிற்கு இணையாக சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய கொள்கை திட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்று தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத் தரமும், பட்டாசு தொழிலின் மதிப்பும் சர்வதேச அளவில் உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் சுமார் 90% சிவகாசியில்தான் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.6,000 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறும் இத்தொழிலில், உலகளாவிய சந்தையைக் கைப்பற்றுவதே தற்போதைய முக்கிய இலக்காக உள்ளது. இது குறித்துப் பேசிய அமைச்சர், சீனப் பட்டாசுகளுக்குப் போட்டியாக சிவகாசி பட்டாசுகளின் ஏற்றுமதியை அதிகரிக்கும் போது, ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டத்தின் சர்வதேச அடையாளமும், வாழ்வாதாரமும் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் எனக் குறிப்பிட்டார்.
பட்டாசு தொழிலை மேலும் முறைப்படுத்தவும், சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் ஒரு பிரத்யேகக் கொள்கை கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆலைகளில் விபத்துகளைத் தவிர்க்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வல்லுநர் குழு அமைக்கப்படவுள்ளது. சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் மூலம் பட்டாசுகளை நேரடியாகவும், பாதுகாப்பாகவும் உலக நாடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் போக்குவரத்து மற்றும் தளவாட வசதிகள் மேம்படுத்தப்படும்.
சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசு தயாரிப்பை ஊக்குவித்து, உலக நாடுகளின் இறக்குமதி விதிகளுக்கு ஏற்ப சிவகாசி தயாரிப்புகளை மாற்றுவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். தற்போது ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசின் இந்த புதிய முயற்சி மூலம் சிறு மற்றும் குறு பட்டாசு ஆலைகளும் உலக வர்த்தகத்தில் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கொள்கை திட்டம் மூலம் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்து, சர்வதேச சந்தையில் சிவகாசி பட்டாசுகளைக் கொண்டு சேர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தின் தரம் சர்வதேச அளவில் உயரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.