‘அவள் ஒரு தெய்வம்’ - தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

அஸ்தியை மட்டும் தாமிரபரணியில் கரைத்துக் கொள்ளலாம்.
‘அவள் ஒரு தெய்வம்’ - தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!
Published on

சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் விடுவதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றை ஒரு சட்டபூர்வ நபராக அங்கீகரித்தும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தாமிரபரணி வெறும் நதி மட்டுமல்ல, அது இந்துக்களால் தெய்வமாக வழிபடப்படுவதால் அதற்கு ஆளுமை அந்தஸ்து வழங்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அவள் ஒரு தெய்வம்

“தாமிரபரணி நதி இந்துக்களால் ஒரு தெய்வமாக வணங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அது ஒரு நபரின் தன்மையைக் கொண்டுள்ளது. ஆகையால், தாமிரபரணி ஒரு நதி என்பதால் அல்ல, மாறாக அவள் ஒரு தெய்வம் என்பதால் நாங்கள் அவளது ஆளுமையை அங்கீகரிக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

அவளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. அது பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களில் காணப்படும் சட்டப்பூர்வ விதிகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும், நதியின் சொந்த உரிமைகளையும் மீறுவதாகும். இதன்மூலம் அவள் தனது உள்ளார்ந்த மதிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறாள்.” என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

அஸ்திக்கும் மட்டும் அனுமதி

நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், மே 7 முதல் மே 28 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளின்போது, ​​86 முதல் 90 டன் வரையிலான ஆடைகள், 2.2 டன் சாம்பல், 1,385 கிலோகிராம் நெகிழி கழிவுகள், 220 கிலோகிராம் கண்ணாடிப் புட்டிகள் மற்றும் 374 கிலோகிராம் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கபட்டது.

இதனைத்தொடர்ந்து, மதத்தின் பெயரால் நீர்நிலையை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது எனக்கூறிய நீதிமன்றம், தாமிரபரணியில் துணிகள் மற்றும் இதரப் பொருட்களைக் கொட்டுவதற்கு தடை விதித்தது.

ஆனால் இந்தியர்கள் ஆறுகள் மற்றும் கடல்நீருடன் கொண்டுள்ள ஆன்மிகரீதியான உணர்வுகளையும், அதற்காக அங்கு அவர்கள் செய்யும் சடங்குகளையும் கருத்தில்கொண்டு இறந்தவர்களின் சாம்பலை மட்டும் ஆற்றில் கரைக்க அனுமதி அளித்துள்ளது.

சுடப்படாத பானையில் மட்டுமே சாம்பலை எடுத்து செல்லவேண்டும் எனவும், மேலும் பானைகளுடன் சாம்பலை ஆற்றில் வீசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

மனிதன் மாறவேண்டும்

இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், மனிதர்கள் அதை கடைபிடித்து அவர்களது இயல்பை மாற்றினால்தான் மாற்றம் நிகழும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க சட்டங்கள் மட்டும் போதாது. கடுமையான அமலாக்கம்கூட நோக்கத்தை அடையாது. மனித இயல்பு மாற வேண்டும். மேலும், அது தார்மீகத் தலையீடுகளால் மட்டுமே சாத்தியமாகும். ஓர் உதாரணம் உடனடியாக நினைவுக்கு வருகிறது. முட்டையிடுவதற்காக மேற்குக் கடற்கரைக்கு வரும் ஆமைகள் இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன. ஒரு பிரபலமான மத போதகர், பிரசவத்திற்காகத் தாய்வீட்டிற்கு வரும் மகள்களுடன் அந்த ஆமைகளை ஒப்பிட்டார்.

இவ்வாறு, அந்தச் செய்தி ஆழமாகப் பதியவைக்கப்பட்டது. சட்டத்தால் தடுக்க முடியாததை, கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தடுத்தது. எனவே, நீதித்துறை ஆன்மீகச் சூழலியலுடன் தன்னை மேலும் மேலும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ,” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கின் பின்னணி

பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான 'ஆனந்தவிலாஸ்' மண்டபத்தை நிர்வகித்து வந்த சீவனுபாண்டியன் என்பவருக்கு, அது ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி அரசு சார்பில் நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில்தான் மேல்குறிப்பிட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை ஆவணங்களின்படி அந்த இடம் "ஆற்றுப் புறம்போக்கு" என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையை ஆற்றிலிருந்து பிரிக்க முடியாது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com