

ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா விடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்று திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்.
அதே நேரத்தில் செந்தில் பாலாஜி த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் வருகிற 4-ந்தேதி வரை கையெழுத்து போடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 25-ந்தேதி முதல் செந்தில் பாலாஜி தினமும் கையெழுத்து போட்டு வரும் நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்து உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்காத நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடி முன்ஜாமீன் பெற்றார். இருப்பினும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசா்ா விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இரு வரும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 45 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறார்கள். இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியின் நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அவர்களிடமும் பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளது. அதனை மையமாக வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.