ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றனர்.
Ex Minister Senthil balaji
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த கட்சியின் தலைவரான விஜய் முதலமைச்சர் ஆனார். இதை தொடர்ந்து விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் நடத்தப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது.

ரூ.35 கோடி

ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை அணுகி சிலர் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக ஆசைகாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக இளையராஜா எம்.எல்.ஏ. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி

இந்த விவகாரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அசோக் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் கரூர் சென்று சம்மனும் அளித்தனர்.

இதையடுத்து இருவரும் தலைமறைவாக இருந்தபடியே ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். கடந்த 8-ந்தேதி இருவருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

முன்ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.25000-க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும்.

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணி, மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.

இதன்படி செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றனர்.

இன்று ஆஜர்

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் இன்று காலை 10.30 மணி அளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். இருவரும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி முதல் நாளான இன்று கையெழுத்து போட்டனர். அவர்களுடன் வக்கீல்களும் உடன் வந்திருந்தனர். இதன் காரணமாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

கலைக்க கூடாது

மறு உத்தரவு வரும் வரை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட்டு நிபந்தனை விதித்து இருப்பதால் செந்தில் பாலாஜி தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விசாரணை நிறைவு

ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பாக 2 மணி நேரத்திற்கு மேலாக செந்தில்பாலாஜியிடம் திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

விசாரணை முடிந்து வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பும்போது,“செய்தியாளர்களிடம் பிறகு பேசுகிறேன்” என கூறிவிட்டு செந்தில் பாலாஜி நகர்ந்து சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com