

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தின் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. இந்த அநாகரிகமான மற்றும் கொடூரமான குற்றச்செயலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யவேண்டும். தீவிர ரோந்து பணியில் காவல்துறை ஈடுபடவேண்டும்.
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயர்ந்து வந்து உழைக்கும் எளிய மக்களின் குழந்தைகளுக்குக்; கூட பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவது மிகுந்த வேதனையளிக்கிறது. பிஞ்சு என்றும் பாராமல் இத்தகைய மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்குச் சட்டத்தின் முன் எவ்வித விலக்கும் அளிக்கக் கூடாது.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு, நீதிமன்றத்தின் மூலம் மிக விரைவாக, கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும். மேலும், வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும். குழந்தையை இழந்து தவிக்கும் வடமாநிலத் தம்பதியினருக்குத் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடும், தார்மீக ஆதரவும் வழங்க வேண்டும்.
சிப்காட் போன்ற தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். சிசிடிவி கேமராக்களை அதிகரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சட்டரீதியான நீதி விரைந்து கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.