

சென்னைக்காக முன்மொழியப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, தமிழ்நாடு அரசு இதுவரையிலும் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை அமைச்சர் முரளிதர் கிசான் மொஹோல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், ‘முன்மொழியப்பட்ட விமான நிலையத்தை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை’ என்று எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு சர்வதேச புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழிற்கல்வி கழகத்திற்கு (டிட்கோ) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
2024 செப்டம்பரில் டிட்கோ சமர்ப்பித்த கொள்கை ரீதியான விண்ணப்பத்தின்படி, திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 10,500 கோடி ஆகும்.” என தெரிவித்தார்.
மத்திய அரசால் சென்னையில் முன் மொழியப்பட்ட இந்த இரண்டாவது விமான நிலையம், நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் மொத்த நிலத்தில், சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலமாகவும் (பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுடையது), மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானதாகவும் உள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இடப்பெயர்வு மற்றும் விவசாய நில இழப்பு குறித்த கவலைகள் காரணமாக ஏகனாபுரம் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்கள் இம்மக்களின் போராட்டம் தொடர்ந்தாலும், யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.
இச்சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய், கடந்தாண்டு ஜனவரி அப்பகுதிக்குச் சென்று, அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
போராட்டக் களத்திற்கு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, தனியார் மண்டபம் ஒன்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து, இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்பதாக உறுதியளித்தார்.
மேலும் வளர்ச்சியை தடுக்கவில்லை என்றும், மாற்று இடத்தையே தேர்வு செய்ய வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதுவரை அவர் தலைமையிலான அரசு அமைந்தபிறகும் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.