கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து

வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழும்பி வீசுவதை காணலாம்
கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழும்பி வீசுவதை காணலாம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டம் தாழ்வு, சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று பவுர்ணமி என்ற நிலையில் நேற்றே கன்னியாகுமரியில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.

இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவை சீற்றமாக காணப்பட்டன. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

அதே நேரம் வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இந்த மாற்றங்களை தொடர்ந்து திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் சுற்றுலா போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்தும தொடங்கப்படவில்லை. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலும் கடலில் அதே நிலை நீடித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com