திருமணம் ஆகாத பெண் போலீசிடம் செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்

மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுத்தால் கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை கால் முறிவு ஏற்படும் என கூறிய சவுக்கு சங்கர்.நீதிமன்ற காவலில் இருக்கும்போது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருமணம் ஆகாத பெண் போலீசிடம் செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்
Published on

திருச்சி:

போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்கு சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்த அழைத்து வந்தனர்.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதால் அவரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றனர்.

இதனையடுத்து நீதிபதி ஜெயப்பிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்பு மீண்டும் சவுக்கு சங்கர் வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக காரசார விவாதம் நடந்தது. அப்போது, இந்த ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

போலீஸ் வேனில் தன்னை தாக்கிய பெண் காவலர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கையில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த பெண் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சவுக்கு சங்கர் தன்னை மிரட்டியதாகவும், எங்களது பெயரை மீடியாவில் சொல்லி தவறான தகவல்களை பரப்புவேன் என்று கூறியதாக குற்றம் சாட்டினார்.

அதே சமயம் இன்னொரு பெண் காவலர், "வேனில் வரும் போது திருமணம் ஆகாத என்னிடம் சவுக்கு சங்கர் செல்போன் நம்பரையும், பெயரையும் கேட்டார் என்றும் ஒருவேளை என் பெயரை சொல்லி இருந்தால் எனக்கு சவுக்கு சங்கர் அவப்பெயர் ஏற்படுத்தி இருப்பார்" என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பெண் காவலர்கள் சட்டையில் பெயர் பட்டை இல்லாமல் தன்னை வாகனத்தில் அழைத்து வந்தனர் என்று சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும்போது கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை கால் முறிவு ஏற்படும் சூழல் ஏற்படும் என்றும் நீதிமன்ற காவலில் இருக்கும்போது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்பு சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com