

சேலம்:
சேலத்தில் முளைப்பு தேங்காய் பூ விற்பனை அதிகரித்துள்ளது. இதை சாப்பிட்டால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும் என்பதால் மக்கள் அதிக அளவில் இதனை வாங்கி செல்கின்றனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் முளைப்பு தேங்காய்ப்பூ விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.
முற்றிய தேங்காய் நீர், இளநீர், தேங்காய்ப் பால், தேங்காய் துண்டுகள், தேங்காய் எண்ணெய் என தேங்காயிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருள்களிலும் வெவ்வேறு வகையான அற்புத சுவையும் மருத்துவ குணங்களும் கொண்டிருக்கின்றன.
அதேபோல தான் தேங்காயை முளைகட்ட வைத்தால் அதற்குள்ளே முளைக்கும் தேங்காய்ப் பூவிலும் ஏராளமான மருத்துவப் பயன்கள் இருக்கின்றன. முற்றின தேங்காயிலிருந்து வரக்கூடிய கரு வளர்ச்சிதான் தேங்காய்ப்பூ. இந்த தேங்காய்ப்பூ தேங்காயின் முழு உள்பரப்பும் நிறைந்து உருண்டை வடிவத்தில் வெண்மையாக சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும்.
கோயிலில் தேங்காய் உடைக்கும்போது அந்த தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவதுண்டு. மட்டுமல்லாது தேங்காய் பூ அநேக மருத்துவ குணங் களையும் தன்னகத்தே கொண்ட ஒன்றாகும். தேங்காயிலும், தேங்காய் தண்ணீரிலும், இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதோ, அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு.