

எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்க ணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோணசமுத்திரம் கிராமம் கண்ணியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 56). தி.மு.க. பிரமுகரான இவர், கடந்த முறை கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார்.
தற்போது, தி.மு.க.வில் மாவட்ட பிரதிநிதி பொறுப்பு வகித்து வந்தார். மேலும் இவருக்கு சொந்தமாக கோணசமுத்திரம் கிராமத்தில் விவசாய தோட்டங்கள் உள்ளது. இங்கு அவர் விவசாய பணிகளும் செய்து வந்தார்.
இன்று காலையில் கந்தன், கண்ணியாம்பட்டி அருகே உள்ள தேஞ்சான் வளவு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சின்னப்பையன், மணிகண்டன் ஆகியோர் திடீரென வழிமறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சின்னப்பையன், மணிகண்டன் ஆகியோர் மறைத்து எடுத்து வந்த அரிவாளால் கந்தனை ஓட, ஓட விரட்டி வெட்டினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடிதுடித்து கொண்டிருந்த கந்தனை, பக்கத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக உறவினர்கள் சீரகாபாடி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கந்தன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த எடப்பாடி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட கந்தனும், சின்னப்பையன், மற்றும் மணிகண்டன் ஆகியோர் உறவினர்கள். நிலத்தகராறு காரணமாக அவர்கள் கந்தனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.