

சேலம்:
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 3 லடச்த்து 52 ஆயிரத்து 523 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 66 ஆயிரத்து 751 பேரும், இதர வாக்காளர்கள் 87 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 19 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலுக்காக 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மின்சார வசதி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கு வாக்குச்சவாடியில் இட வசதி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி ஏற்பாடு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்படுகிறது. சேலம் மாநகராட்சியில் உள்ள 709 வாக்குச்சாவடிகளில் 56 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சவாடிகள் என கண்டறியப்பட்டது. இதேபோல சேலம் புறநகரில் மொத்தம் உள்ள 810 வாக்குச்சாவடிகளில் 230 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் பதட்டமான 295 வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்படுகிறது. மேலும் இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தவும், தேர்தலை சுமூக மாக நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.