

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் புதுச்சேரி மது பானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப் படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நெசப்பாக்கம், அன்னை இந்திரா தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வசித்து வரும் சரவணன் என்ற வாலிபர் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரிடம் இருந்து மதுபானங்களை பெற்று விற்பனை செய்து வந்ததாக கூறி உள்ளார்.
இதையடுத்து உமா சங்கரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதில், பெருமளவில் புதுச்சேரி மது பானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பீர், ரம், விஸ்கி, வோட்கா உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மொத்தம் 311 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.7,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், உமாசங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.